நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் இரவு நேரங்களில் உறை பனி..! வானிலை மையம் தகவல்..!
நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் இன்று கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில், உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும். நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது.
வரும் 5, 6-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 7-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 8-ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், இதர தமிழகத்தில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.