"அதிகாரம் இருந்தால் தான் பாமர மக்களுக்கு நீதி கிடைக்கும்" - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்கும் ஸ்ரீமதியின் தாய்!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக மற்றும் தேமுதிக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று எதிர்பாராத திருப்பமாக, கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி, கணியாமூர் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் முன்கூட்டியே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 64 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீமதி தாயார் செல்வி கூறுகையில், "தனது மகளை இழந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. என் மகளுக்கு ஏற்பட்டது, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. பாமர மக்களுக்கு நீதி கிடைப்பது இந்த சமூகத்தில் மிகவும் கடினமாக உள்ளது. அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்." என்றார்.