மிகப்பெரிய சாதனை படைத்த ஸ்ரேயஸ் ஐயர்!… தோனியாக மாறிய KL ராகுல்!… மிரண்டு போன இலங்கை!
உலகக்கோப்பை தொடரின் இந்திய அணிக்கு எதிரான 33வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இந்தியஅணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். ஹிட்மேன் தனது முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே மதுஷங்க கிளீன் போல்ட் செய்து ரோஹித்தை பெவிலியனுக்கு அனுப்பினார்.
பின்னர், சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரை சதங்களை பூர்த்தி செய்தனர். சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 92 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த பார்ட்னர்ஷிப் 189 ரன்களை குவித்தது. மறுபுறம் சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்து சச்சின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இருவரும் சதத்தை தவறவிட்டனர். தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
அதாவது, கசுன் ராஜித் வீசிய 36-வது ஓவரின் நான்காவது பந்தில் 106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த மேக்ஸ்வெல்லை பின்தள்ளி ஸ்ரேயஸ் ஐயர் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் தரம்சாலாவில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 104 மீட்டர் சிக்ஸர் அடித்து அதிக தூரம் சிக்ஸர் அடித்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் இருந்தார். அதிரடியாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக 50 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன, பாத்தும் நிஸ்ஸங்க இருவரும் இறங்கினர். முதல் பந்திலே பும்ரா வீசிய பந்தில் எல்பிடபிள்யூவில் டக் அவுட் ஆனார். அடுத்து குசல் மெண்டிஸ் களமிறங்க 2-ஓவரின் 2 பந்தில் தொடக்க வீரர் திமுத் கருணாரத்ன சிராஜ் வீசிய பந்தில் எல்பிடபிள்யூவில் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து இலங்கை வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். குறிப்பாக, 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. பின்னர் மேத்யூஸ் - சமீரா கூட்டணி நிதானமாக ஆடியது. இதையடுத்து 12வது ஓவரை வீசுவதற்காக முகமது ஷமி வந்தார். அப்போது அந்த ஓவரின் 3வது பந்தை சமீராவுக்கு வீசினார். அந்த பந்து சமீராவின் கிளவ்ஸிஸ் பட்டு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது. ஆனால் சமீராவின் கிளவ்ஸில் பந்தை பட்டது வேறு எந்த இந்திய வீரருக்கும் தெரியவில்லை.
இதனால் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மட்டும் அவுட் என்று அப்பீல் செய்தார். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. மாறாக ஒய்டு கொடுத்தார். இதையடுத்து ரோகித் சர்மாவிடம் விடாபிடியாக டிஆர்எஸ் அப்பீல் செய்யுமாறு கோரிக்கை வைத்தார். கேஎல் ராகுல் பேச்சை கேட்டு ரோகித் சர்மா அப்பீல் செய்ய, ரீப்பிளேவில் ஷமி வீசிய பந்து சமீராவின் கிளவ்ஸில் பட்டது தெரிய வந்தது. இதன் மூலமாக ஷமி 3வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 55 ரன்கள் எடுத்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் முகமது ஷமி 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும் , பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்வியை அடைந்து 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் முகமது ஷமி 45 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இவரை அடுத்து ஜாகீர் கான் – 44 விக்கெட்டையும் , ஜவகல் ஸ்ரீநாத் – 44 விக்கெட்டையும் வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.