இறந்த சோழ அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்கள்.! என்ன காரணம்.!?
நம் முன்னோர் காலத்தில் இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. அதாவது கணவர் இறந்தவுடன் பெண்கள் உயிருடன் கணவரின் சடலத்தை எரிக்கும் தீயில் இறங்குவதையே உடன்கட்டை ஏறுவது என்பதாகும். இதைப் போன்ற ஒரு வித்தியாசமான, அதிர்ச்சியூட்டும் வழக்கம் சோழர் காலத்தில் இருந்து வந்துள்ளது.
அதாவது சோழ அரசர்கள் உயிரிழக்கும் முன்பு தங்களுக்கு பிடித்தமான நபர்களையும் சேர்த்து தங்களுடன் புதைக்க வேண்டும் என்று கூறிவிட்டு தான் உயிரிழப்பார்களாம். இறந்த பின்னும் தங்களுடன் பிடித்தமான நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை சோழர்கள் ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
குலோத்துங்க சோழன் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் ஆட்சி செய்த சிற்றரசன் பிரதிகங்கன் ஆட்சி காலத்தில் நடைபெற்ற இந்த வித்தியாசமான பழக்கத்தை குறித்து அக்னீஸ்வரர் கோயிலின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த கல்வெட்டில் கூறப்பட்டதாவது, "சிற்றரசன் பிரதிகங்கன் உயிரிழந்த போது அவர் அரசவையில் பாட்டு பாடிய மூன்று பெண்களையும், அவருடன் சேர்த்து உயிருடன் புதைத்து விட்டனராம்"
மேலும் தாமரைப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள கோயில் கல்வெட்டில் சிற்றரசன் பிரதிகங்கனுடன் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்கள் மூவரின் குடும்பத்தார்களுக்கும் நிலம் இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும், அவர்களின் வாரிசு இல்லாத குறையை தீர்ப்பதற்கு 16 ஜான் கோலால் அளந்த நிலம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட வழக்கங்களும், நம்பிக்கைகளும் தற்போது கேட்கும்போது நமக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் தான் இருந்து வருகிறது.