ஷாக்!… கோவாக்சின் பக்கவிளைவுகள்!… பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை அதிகரிப்பு!
Covaxin கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பிரச்சனைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவாக்சின் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தால், செயலற்ற வைரசைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா நோயிற்கான தடுப்பு மருந்து. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா வைரசு தடுப்பு மருந்தாகும்.
பாரத் பயோடெக்கின் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி கோவாக்சின் செலுத்திக் கொண்ட நபர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினருக்கு ‘பக்கவிளைவுகள்’ ஏற்பட்டதாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஒரு வருட பின்தொடர்தல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்கேற்ற 926 பேரில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பின்தொடர்தல் காலத்தில் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர். பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவு ஒரு சதவீத நபர்களில் பதிவாகியுள்ளதாகவும் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் தடுப்பூசியின் நீண்டகால பாதுகாப்பைப் பார்த்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பிரிங்கர் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கை, இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட் தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கையைக் குறைப்பதன் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஆய்வு வந்துள்ளது.
"தனிநபர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கிய தோல் மற்றும் அதுதொடர்பான கோளாறுகள், பொதுவான கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஆகியவை தடுப்பூசி பெற்ற பிறகு இளம் பருவத்தினரிடையே காணப்பட்ட மூன்று பொதுவான பாதிப்புகள் "என்று ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பிபிவி 152 தடுப்பூசி பெற்ற 635 இளம் பருவத்தினர் மற்றும் 291 பெரியவர்கள் ஈடுபட்டனர். தடுப்பூசி போட்ட 1 வருடத்திற்குப் பிறகு பக்க விளைவுகள் குறித்து பங்கேற்பாளர்கள் தொலைபேசி மூலம் நேர்காணல் செய்யப்பட்டனர். புதிதாக தொடங்கிய தோல் மற்றும் தோல் தொடர்புடைய கோளாறுகள் (10.5 சதவீதம்), பொதுவான கோளாறுகள் (10.2 சதவீதம்), மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் (4.7 சதவீதம்) இளம் பருவத்தினரிடையே பொதுவான பக்கவிளைவுகளாக இருக்கின்றன.
பொதுவான கோளாறுகள் (8.9%), தசை சம்பந்தப்பட்ட கோளாறுகள் (5.8%), மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் (5.5%) ஆகியவை பெரியவர்களில் பொதுவான பக்கவிளைவுகளாக இருந்தன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 4.6 சதவீதத்தில் மாதவிடாய் தொடர்புடைய பாதிப்புகள் காணப்பட்டன என தெரியவந்துள்ளது. பங்கேற்பாளர்களில் 2.7 சதவீதம் மற்றும் 0.6 சதவீதம் பேருக்கு கண் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் காணப்பட்டன எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களில் நான்கு இறப்புகள் (மூன்று பெண்கள், ஒரு ஆண்) பதிவாகியுள்ளன என்று ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நால்வருக்கும் நீரிழிவு நோய் இருந்தது, மூன்றில் உயர் இரத்த அழுத்தம் இருந்தது, மேலும் அவர்களில் இருவருக்கு தடுப்பூசிக்கு முந்தைய கோவிட் -19 இன் வரலாறு இருந்தது என குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான பக்கவிளைவுகள் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு நீடிப்பதால், தாமதமாகத் தொடங்கும் பக்கவிளைவுகளின் போக்கையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள கோவிட்-19-தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் நீட்டிக்கப்பட்ட கண்காணிப்பு தேவைப்படுகிறது என்று ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கோவாக்சின் இரண்டு டோஸ்களைப் போட்டுக் கொண்ட பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, மூன்று டோஸ் பெற்ற பெரியவர்கள் மற்றும் பிபிவி 152 இன் ஒரு டோஸ் பெற்றவர்கள் முறையே நான்கு மற்றும் இரண்டு மடங்கு அதிக பக்கவிளைவுகளின் ஆபத்தில் உள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிஷீல்டு விவகாரத்தைத் தொடர்ந்து கோவாக்சின் பாதுகாப்பானது என அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: சரத்குமாரை சீண்டிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.. புகார் அளித்த ராதிகா சரத் குமார்!