நாடு முழுவதும்.. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறை...! உச்ச நீதிமன்றம் அதிரடி
நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அணுகக் கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது கழிப்பறைகளை கட்ட உத்தரவிட வேண்டு என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “கழிப்பறை என்பது வசதிக்கானது மட்டுமல்ல, மனித உரிமையின் அடிப்படை அம்சமாகும்” என்றனர். மேலும், “அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், சரியான சுகாதார வசதி என்பது ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்கிறது.
அனைத்து கோர்ட்டுகளிலும், குறிப்பாக முறையான வசதிகள் இல்லாத இடங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் எளிதில் அணுகக்கூடிய கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட் வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனி கழிப்பறைகளை கட்ட வேண்டும். இந்த பணிகளை கண்காணிக்க 6 வாரங்களுக்குள் அனைத்து மாநில நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.