பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் 1,646 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்...!
பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.31,830 கோடி மதிப்பிலான 1,646 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் தனது செய்தி குறிப்பில்; கடந்த 2016-17 நிதியாண்டு முதல் பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தை (பிஎம்கேஎஸ்ஒய்) மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் உணவுப்பொருள் பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் திறன் ஆண்டுக்கு 428.04 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13.42 லட்சம் பேருக்கு வேலை கிடைப்பதுடன் 51.24 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி நிலவரப்படி, ரூ.31,830 கோடி மதிப்பிலான 1,646 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் ரூ.22,722.55 கோடி தனியார் முதலீட்டையும் ஈர்க்கும் திறன் கொண்டது. இந்த திட்டங்கள் உணவுப்பொருள் பரிசோதனை ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியவை ஆகும்.
கடந்த 2020-21 முதல் பிரதமரின் உணவுப்பொருள் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் (பிஎம்எப்எம்இ) திட்டத்தையும் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உணவுப் பொருள பதப்படுத்தும் குறு நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான நிதி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்க ஆதரவு வழங்கப்படுகிறது. இது அமைப்புசாரா பிரிவினருக்கான முதல் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வரை ஆரம்ப மூலதன ஆதரவுடன் 3.1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்களுக்கும் கடன் இணைப்பு மானியத்துடன் 1,14,388 தனி நபர்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.