செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிக்கல்!… இதுதான் கடைசி வாய்ப்பா?… ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை வாசம் அனுபவித்து வந்தார். இந்தநிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 19ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து, செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ந் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.