அண்ணாமலைக்கு சீமான் நேரடியாக விடுத்த சவால்...! தோற்றுவிட்டதா தமிழக பாஜக...?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதிகளில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும், தமிழக எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதம் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிமுக 20.46 சதவீதமாகவும், , பாஜக11.24 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.
அதே போல நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது.
கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை , திருச்சி, புதுச்சேரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை தொகுதியில் அதிகபட்ச 1.63 லட்சம் வாக்குகள் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. பாஜக தனியாக எடுக்கும் வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை எடுக்கும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சீமான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு சவால் விடுத்திருந்தார்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 18 சதவிகிதம் வாக்குகளையும் தனித்து 11.5 சதவிகிதம் வாக்குகளை பாஜக வாங்கி உள்ளது. நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டு 8.5 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்ணாமலைக்கு விடுத்த சவாலில் தோல்வியடைந்துள்ளார்.