”முதலில் தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்லுங்க”..!! திருமாவளவனின் கேள்வியால் கொந்தளித்த நிர்மலா சீதாராமன்..!!
லோக்சபாவில் சிதம்பரம் தொகுதியின் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைருமான தொல்.திருமாளவன் பேசினார். அப்போது அவர், "இந்திய ஒன்றிய அரசு போதைப்பொருளையும், சாராயத்தையும் முழுமையாக நீக்குவதற்கு, விலக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் என்பது இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக தாராளமாக புழக்கத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இது நாட்டுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். இளைஞர்களுக்கு செய்கிற துரோகம். எனவே, தேசிய மதுவிலக்கிற்கு அரசு ஒரு கொள்கையை கொண்டு வந்து இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, திருமாவளவனுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் போதை பொருள் நடமாட்டம் இல்லாத நாடாக மாற்ற கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அவரது கவலையை பகிர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவரது கட்சி கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
அங்கு 56 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இதனால் நீங்கள் முதலில் அறிவுரைகளை தமிழ்நாட்டுக்கு சொல்ல வேண்டும். அங்கு முதலில் பேச வேண்டும். போதைப்பொருள் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதனை தவிர என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்றார். இந்த வேளையில் தமிழ்நாடு கள்ளச்சாராயம் பலி பற்றி நிர்மலா சீதாராமன் கூறியதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் நிர்மலா சீதாராமனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு உருவானது.