வழுக்கை தலை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லுங்க..!! வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு..
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளாக 'மச்சம்' குறித்து ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில்தான் முடி உதிர்தலுக்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலில் மச்சங்கள் தோன்ற என்ன காரணம், அதன் பணி என்ன? குறிப்பாக மச்சம் இருக்கும் இடத்தில் முடி வளர என்ன காரணம்? என்கிற கோணத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு சராசரியாக 50-100 முடிகள் உதிரும். பின்னர் தலையில் இருக்கும் ஸ்டெம் செல்கள் புதிய முடியை வளர்க்க உதவும். ஸ்டெம் செல்கள் செயலற்று இருந்தால் முடி வளராது. இதனால் தான் வழுக்கை ஏற்படுகிறது. ஆக முடியை மீண்டும் வளர்க்க, ஸ்டெம் செல்லை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த வேலையைதான் ஆஸ்டியோபொன்டின் என்ற மூலக்கூறு செய்கிறது.
இந்த ஆஸ்டியோபொன்டின் மூலக்கூறு நம் உடலில் உள்ள மச்சத்தில் அதிகம் இருக்கிறது. இதனால்தான் மச்சத்திற்கு நடுவே முளைக்கும் முடிகள் நீளமாக இருக்கின்றன. இதை ஆய்வு செய்ய, மனித தோலை வெட்டி எடுத்து அதை எலியின் உடலில் ஒட்டி, அந்த எலிக்கு ஆஸ்டியோபொன்டின் ஊசி மூலம் செலுத்தியுள்ளனர். சில நாட்களில் எலி உடலில் மனித தோல் இருந்த பகுதியில் புதியதாக முடிகள் 1 செ.மீ நீளம் வரை முளைத்திருக்கிறது.
இதே முறையை பின்பற்றி மனிதர்களுக்கும் முடியை வளர வைக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இளமை காலத்தில் வளர்ந்ததை போலவே முடி வளரும். அதாவது, இளமையில் சுருட்டை முடி இருந்தால், அதேமாதிரி இந்த சிகிச்சையின்போதும் முளைக்கும். ஆனால் இந்த ஆய்வு இதுவரை மனிதர்களிடையே நடத்தி பார்க்கவில்லை. மனிதர்களிடையே இந்த சோதனை வெற்றி பெற்றால் இனி வழுக்கை தலை பிரச்னையே இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Read more ; த.வெ.க கட்சி கொடிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்…! மகிழ்ச்சியில் தொண்டர்கள்