அதிர்ச்சியில் சசிகலா..!! அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பின்னர், ஒற்றை தலைமை விவகாரம் பூகம்பமாக வெடித்த நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.