ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்...! பாஜகவில் இணைவதாக சம்பாய் சோரன் அறிவிப்பு..!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சம்பாய் சோரன் பாஜகவில் இணைவதாக அறிவிப்பு.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டிருந்தார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் பழங்குடியின மக்களை பாதுகாக்கவே பாஜகவில் இணைகிறேன் என கூறியுள்ளார். பழங்குடியினரின் அடையாளத்தையும் இருப்பையும் காப்பாற்றும் போராட்டத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது. வங்கதேசத்தினர் ஊடுருவல் விவகாரத்தில் பாஜக மட்டுமே தீவிரம் காட்டுகிறது; ஊடுருவல்காரர்களால் பழங்குடியின மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. எனவே தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதால் தெரிவித்துள்ளார்.