ரஷ்யா - உக்ரைன் போர்; அடிபணிந்த புதின்!. டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!. வெளியான அறிவிப்பு!
Putin: உக்ரைன் நாட்டில் நிலவி வரும் பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இடையேயான அபத்தமான போரை முடிவுக்கு கொண்டுவராவிட்டால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நேற்று செய்தியாளரிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், புதினும் டிரம்பும் தொலைபேசி மூலம் உரையாட வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளரின் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், "ஆழமான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான நேரடி சந்திப்புக்கு முன்னதாக ஒரு தொலைபேசி உரையாடல் மிகவும் அவசியம். ட்ரம்ப் உடன் தொலைபேசியில் உரையாட புதின் தயாராக இருக்கிறார். (வாஷிங்டனின்) சிக்னல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
வியாழக்கிழமை டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய ட்ரம்ப், "அணு ஆயுதக் குறைப்பை நாங்கள் காண விரும்புகிறோம். அணு ஆயுதங்களை குறைக்கும் யோசனையை அதிபர் புதின் மிகவும் விரும்பினார் என்று நான் உங்களுக்குச் சொல்வேன். உலகின் பிற பகுதிகளும் அவர்களைப் பின்பற்றச் செய்திருப்போம். சீனாவும் உடன்பட்டிருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புவதாக புதின் தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உட்பட பிற நாடுகளின் அணு ஆயுதங்களையும் குறைக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் பரந்த அளவில் இருக்க வேண்டும். எனவே, பேசுவதற்கு ஏதோ இருக்கிறது, நாம் பேச வேண்டும். பல விஷயங்களில் நேரம் கடந்துவிட்டது. இது தொடர்பான எங்கள் ஆர்வத்தை நாங்கள் முன்பே தெரிவித்திருக்கிறோம். எனவே, இது விஷயத்தில் அமெரிக்காதான் முடிவு எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவும் ரஷ்யாவும் பயன்படுத்தக்கூடிய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையையும், அவற்றை பயன்படுத்துவதற்கான ஏவுகணைகள் மற்றும் குண்டுவீசும் விமானங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் பிப்ரவரி 5, 2026 அன்று காலாவதியாக உள்ளது. எனவே, உலகின் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த உள்ள கடைசி வாய்ப்பாக இந்தப் பேச்சுவார்த்தை கருதப்படுகிறது.