எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000..? அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!
மழை வெள்ள நிவாரணமாக ரூ.6,000 வழங்கப்பட உள்ள நிலையில், எந்தெந்த பகுதிகளில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி மட்டுமின்றி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, டிசம்பர் 15, 16ஆம் தேதிகளுக்குள் டோக்கன்கள் வழங்கப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் நிவாரணம் வழங்கப்பட இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.