'ரூ.4,000 கோடி’..!! ’ஸ்டாலின் தான் வராரு’..!! மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டும் வகையிலும், வடிநீர் வாய்க்கால்கள் சீரமைப்பிற்கு ரூ.4,000 கோடி ரூபாயை செலவிட்டதாக கூறிய தமிழ்நாடு அரசை கண்டிக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் திமுகவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. 5-வது நாளாக இன்று வெள்ளம் வடியாத நிலையில், பல இடங்களில் மக்கள் மின்சாரம், குடிநீர், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வடசென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதை பார்வையிடக்கூட அதிகாரிகள், அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள் ஆகியோர் வரவில்லை என மக்கள் கொந்தளிக்கின்றனர்.
இதற்கிடையே, மழை துவங்குவதற்கு முன்பே சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில், வடிநீர் கால்வாய்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்திருப்பதாக தமிழ்நாடு அரசும், அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தனர். ஆனால், மழையின் போது வெள்ள நீர் வடியாமல் நகரம் முழுவதும் தேங்கியதை சுட்டிக்காட்டி, சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களும், எதிர்க்கட்சிகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, எக்ஸ் தளத்தில் திமுகவை விமர்சிக்கும் வைக்கும் பல ஹேஷ்டேக்குகளை உருவாக்கி நெட்டிசங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்குகளில், மழைக்காலத்திற்கு முன்பு, ஒரு சொட்டு நீர் கூட தேங்க விடமாட்டோம் என அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பேசிய பேச்சுகள், பேட்டிகள், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு, தற்போது நீர் தேங்கி மக்கள் படும் துயரங்களையும் குறிப்பிட்டு அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.