சிறார்கள் இனி வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம் - ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி
18க்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்கள் ஓட்டிய வாகனத்தின் ஆர்சி புக்கையை ரத்து செய்யும் புதிய விதிமுறை ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் 18 வயது நிறைவு பெறாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. அவ்வபோது சிறார்கள் இயக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் சில சிறார்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும் செய்கிறார்கள். இதன் காரணமாக இருசக்கர வாகன விபத்துகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதை தடுக்க விரும்பிய மத்திய அரசு போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்டத்தை கடுமையாக்கியது. மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றி தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 (ஏ)ன்படி உரிய ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தது. மேலும், சிறுவர்கள் 12 மாதங்ளுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படுவதோடு, வாகனம் ஓட்டிய சிறுவர்களின் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற இயலாது என்று அறிவித்தது. இந்த சட்டம் இன்று வரை முறையாக அமல்படுத்தப்படாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதியின்படி, இனி யாரும் ஓட்டுநர் உரிமம் பெற, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நீண்ட நேரம் வரிசையில் நிற்க தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலேயே ஓட்டுநர் உரிமத்துக்கான சோதனைகளில் ஈடுபடலாம் என்றும் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் சோதனைகளை நடத்துவதற்கும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்குமான தரச்சான்றிதழ்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்டிஓ ஆபிஸ்க்கு பதில் தனியார் நிறுவனங்களே வாகன ஓட்டுநர் உரிமத்தை தரப்போகின்றன அதேபோல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் புதிய விதிகள்:
1) ஜூன் 1 முதல் இந்த அபராதத் தொகை 1000 ரூபாயில் இருந்து, 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2) சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் அவர்களின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவரின் பெற்றோருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
3) சிறுவன் ஓட்டிய வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் (ஆர்சி) புக் ரத்து செய்யப்படும். மேலும் அந்த சிறுவர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்பட மாட்டார்.
4) புதிய விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் புதிய விதிமுறைகளின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சான்றிதழ்களும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.
5) ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் நபரின் எந்த வகை ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்புகிறாரோ அதற்கான, சான்றிதழ்களை அமைச்சகம் முன்கூட்டியே அறிவித்துவிடும். அதேநேரம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை.
6) விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பத்தை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
7) தனியார் ஓட்டுநர் உரிமம் பயிற்சிப் பள்ளித் தொடங்க விரும்பும் நபர், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி என்றால், கண்டிப்பாக 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் தகுந்த சோதனை வசதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகளை வகுத்துள்ளது மத்திய அரசு.
Read More: டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!