35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு ரூ.10,000 பிளஸ் சான்றிதழ்...! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
கலை பண்பாட்டு துறை சார்பில் சிறந்த 50 ஓவியங்கள், சிற்பங்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இதற்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
2024-25-ம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, ஓவியக்கலை பிரிவில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூ.20,000 வீதமும், 35 வயதுக்குட்பட்ட 10 இளம் கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 வீதமும் வழங்கப்படும். இதே எண்ணிக்கை அடிப்படையில் சிற்பக்கலை பிரிவிலும் சிறந்த 25 கலைஞர்கள் என 50 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
2024-25-ம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக்கலைக்காட்சியை நடத்திட ஏதுவாக, முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த ஓவிய, சிற்பக்கலைஞர்களிடமிருந்து ஓவியங்கள்மற்றும் சிற்பங்களின் புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலைஞர்கள் மரபுவழி பிரிவிலோ அல்லது நவீனபாணி பிரிவிலோ என ஏதேனும் ஒரு பிரிவில் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் 2024-ம் ஆண்டு ஜனவரி1-ம் தேதிக்கு பின்னர் கலைப்படைப்பு (ஓவியம், சிற்பம்) உருவாக்கம் மற்றும் படைக்கப்பட்டிருத்தல் வேண்டும். கலை பண்பாட்டுத் துறையின் மூலமாக கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்தோர் விண்ணப்பிக்க கூடாது. ஓவியர்கள் மற்றும் சிற்பிகளிடமிருந்து பெறப்படும் புகைப்படங்களில் இருந்து, மாநில அளவிலான ஓவிய-சிற்ப கலைக்காட்சிக்கு தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் அசல்ஓவியப் படைப்புகளும், சிற்பங்களும் பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும். அதில் சிறந்த 50 கலைப்படைப்புகள் தேர்வுக் குழுவால் பரிசுக்கு தேர்வு செய்யப்படும்.
மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய விவரங்களுடன் படைப்புகளின் புகைப்படங்களை இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 002என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28193195, 044-28192152 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.