மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கிரெடிட் ஆகலையா...! 30 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்...!
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகளில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதும் ஒன்றாகும். இந்த அறிவிப்பை செயல்படுத்த, கடந்தாண்டு மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்றும் பெயரிட்டார்.
இத்திட்டம் மூலம் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலான காலத்தில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 14,723 மகளிர் உட்பட மொத்தம் 1,15,27,172 மகளிர் பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையில், முன்னதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறு மேல் முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேரது விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பதாரர்களுக்கும் தற்போது ரூ.1,000 உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக மேல்முறையீடு செய்து உங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என SMS வந்த 30 நாள்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.