இந்தியாவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் ரோகித், கம்பீரா..? அஸ்வின் ஓய்வுக்கும் இவர்தான் காரணமா..? விசாரணை நடத்தும் பிசிசிஐ..!!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும் என்ற சூழலில் இந்தியா உள்ளது.
எனவே, இந்த போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, தொடரில் இடம்பெற்றிருந்த அஸ்வின் 3-வது போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஓய்விற்கு தலைமை பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்று சர்ச்சைகள் வெடித்தன. மேலும், கம்பீரின் தலைமையில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
மறுபுறம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீதும் பெரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் தொடர்ச்சியாக மோசமான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடப்பு பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு அரை சதம் கூட இதுவரை அடிக்கவில்லை. இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை நடக்கவுள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பை முடிந்ததும் தொடர் தோல்விகள் மற்றும் அஸ்வினின் ஓய்வு குறித்து ரோகித் மற்றும் கம்பீரிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.