பொங்கல் பண்டிகை..!! உங்கள் ஊருக்கு செல்ல எங்கு பஸ் ஏற வேண்டும்..? மொத்தம் 22,676 பேருந்துகள்..!! மாஸ் காட்டிய போக்குவரத்துத்துறை..!!
பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் குறித்து அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். அதில், ”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிளுக்காக வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 10,460 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும் பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 பேருந்துகள் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகாரளிப்பதற்கும் 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 425 6151 (Toll Free Number) 044- 24749002, 044-26280445, 044-26281611 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். மேலும், பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்" என தெரிவித்துள்ளார்.
சென்னையில் எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும்..?
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சை மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.
* அதேபோல் கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போரூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.
* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக பேருந்துகள் செல்லும்.
* மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் செல்லும்.