சாலை விபத்து மரணம்...! 2030-ம் ஆண்டிற்குள் 50% அளவுக்கு குறைக்க இலக்கு...! மத்திய அமைச்சர் தகவல்...
விபத்து மரணங்களை 2030-ம் ஆண்டிற்குள் 50% அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாலைப் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சாலைப் பாதுகாப்பு -இந்திய சாலைகள்@2030 பாதுகாப்பை அதிகரித்தல்’ என்ற தலைப்பில் இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் பேசிய அவர்; அவசர மருத்துவ சேவையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு சமூக நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவது முக்கியம். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
சாலை விபத்துகள் 2022 குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, 4.6 லட்சம் சாலை விபத்துகளில், 1.68 லட்சம் பேர் உயிரிழப்பு, 4 லட்சம் பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள், 19 உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சாலை விபத்துகள் 12 சதவீதமும், சாலை விபத்து உயிரிழப்புகள் 10 சதவீதமும் அதிகரித்துள்ளது, இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14% சமூகப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 60% பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றார்.