புற்றுநோய் ஏற்படும் ஆபத்து.. உணவு, மருந்துகளில் இந்த செயற்கை ஃபுட் கலரை பயன்படுத்த FDA தடை...
Red No. 3 என்ற செயற்கை ஃபுட் கலரை பயன்படுத்த FDA தடை விதித்துள்ளது. இது உணவு, பானங்கள் மற்றும் மருந்துகளில் பிரகாசமான சிவப்பு நிறத்தை வழங்கப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை சாயமாகும்.. இந்த ஃபுட் கலர் புற்றுநோயை ஏற்படுத்துவதால் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளின் நடத்தை சிக்கல்களுடன் தொடர்புடைய Red No. 40 போன்ற வேறு எந்த செயற்கை சாயங்களையும் நிறுவனம் தடை செய்யவில்லை.
உற்பத்தியாளர்கள் இனி Red No.3 செயற்கை சாயத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று FDA தெரிவித்துள்ளது. பொது நலனுக்கான அறிவியல் மையத்தால் 2022 இல் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தத் தடை வந்துள்ளது. இந்த Red No. 3 சாயம் இன்னும் பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மிட்டாய், தானியங்கள், செர்ரிகள் மற்றும் ஸ்ட்ராபெரி-சுவையுள்ள மில்க் ஷேக்குகள் ஆகியவை இதில் அடங்கும்.
பொது நலனுக்கான அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர் பீட்டர் லூரி இதுகுறித்து பேசிய போது, “லிப்ஸ்டிக்கில் பயன்படுத்த Red 3 சட்டவிரோதமானது என்று தடை விதித்த FDA மிட்டாய் வடிவில் குழந்தைகளுக்கு உணவளிப்பது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்று கூறியது. ஆனால் புதிய தடை தற்போது இந்த ஒழுங்குமுறை முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருகிறது" என்று தெரிவித்தார்..
FDA-வின் மனித உணவுகளுக்கான துணை இயக்குநர் ஜிம் ஜோன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், " மனிதர்கள் அல்லது விலங்குகளிடம் புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டால், உணவு சேர்க்கை அல்லது வண்ண சேர்க்கையை FDA அங்கீகரிக்க முடியாது. அதிக அளவு Red No. 3 சாயம் பயன்படுத்தப்பட்ட உணவுகளை எலிக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்ட போது அந்த எலிகளுக்கு புற்றுநோய் இருப்பதை சான்றுகள் காட்டுகின்றன" என்று கூறினார்.
எலிகளில் புற்றுநோய் பாதிப்பு உறுதியான நிலையில் Red No. 3 செயற்கை சாயத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு உற்பத்தியாளர்கள் ஜனவரி 15, 2027 வரை தங்கள் தயாரிப்புகளை மறுசீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. உணவு சப்ளிமெண்ட்ஸ் போன்ற உட்கொள்ளப்பட்ட மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் ஆண்டு அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் இந்த செயற்கை சாயத்தை FDA தடை செய்தது. மனிதர்களிலோ அல்லது விலங்குகளிலோ புற்றுநோயை ஏற்படுத்துவதாகவோ அல்லது தூண்டுவதாகவோ கண்டறியப்பட்ட உணவு சேர்க்கைகளை FDA தடை செய்ய வேண்டும் என்று கோரும் கூட்டாட்சி சட்டத்தின் படி இந்த தடை விதிக்கப்பட்டது.
உணவியல் ஊட்டச்சத்து நிபுணரான கெல்சி கோஸ்டா, இதுகுறித்து பேசிய போது " மனித மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விலங்கு நச்சுயியல் ஆய்வுகள் இரண்டும், Red No. 3 உட்பட செயற்கை உணவு சாயங்கள் குழந்தைகளின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றன, இது கடுமையான ஒழுங்குமுறை மேற்பார்வையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் நிலையான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்கிறது, ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதார ஆதரவாளர்களால் எழுப்பப்பட்ட கவலைகளை நிவர்த்தி செய்கிறது." என்று கூறினார்.
Read more : காபி குடிப்பதால் இறப்பு ஆபத்து குறையும்… ஆனா இந்த நேரத்தில் தான் குடிக்கணும்.. புதிய ஆய்வில் தகவல்…