வாவ்...! சில்லறை விலையில் பாரத் அரிசி 1 கிலோ ரூ.34-க்கு விற்பனை...! இரண்டாம் கட்டம் தொடக்கம்...!
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவற்றின் சில்லறை விற்பனையின் இரண்டாம் கட்டத்தை, தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டத்தில் சில்லறை விலையில் பாரத் ஆட்டா ஒரு கிலோ ரூ.30-க்கும் பாரத் அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.34 என்ற விலையிலும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதில் மத்திய அரசின் கடப்பாட்டை பிரதிபலிப்பதாக இந்த முயற்சி உள்ளது என்று கூறினார். பாரத் பிராண்டின் கீழ் அரிசி, கோதுமை மாவு மற்றும் பருப்பு போன்ற அடிப்படை உணவுப் பொருட்களை சில்லறை விற்பனை மூலம் நேரடியாக விற்பது ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையை பராமரிக்க உதவியுள்ளது என்றார்.
இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப நிலையில், 3.69 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 2.91 லட்சம் மெட்ரிக் டன் அரிசி சில்லறை விற்பனைக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல், சுமார் 15.20 லட்சம் மெட்ரிக் டன் பாரத் ஆட்டா மற்றும் 14.58 லட்சம் மெட்ரிக் டன் பாரத் அரிசி பொது நுகர்வோருக்கு மானிய விலையில் கிடைத்தது. பாரத் ஆட்டா மற்றும் பாரத் அரிசி ஆகியவை கேந்திரிய பந்தர், நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் மற்றும் மொபைல் வேன்களில் கிடைக்கும். இரண்டாம் கட்டத்தின் போது. 'பாரத்' பிராண்ட் ஆட்டா மற்றும் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளிலும் விற்பனை செய்யப்படும்.
பஞ்சாபில் 184 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கை எட்டவும், விவசாயிகளால் மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு தானியத்தையும் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக கூறினார். 2024 நவம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 104.63 லட்சம் மெட்ரிக் டன், நெல் பஞ்சாப் மண்டிகளுக்கு வந்துள்ளது. இதில் 98.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் மாநில நிறுவனங்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கிரேடு 'ஏ' நெல்லுக்கு இந்திய அரசு தீர்மானித்தபடி குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ரூ.2320-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 2024-25 காரீஃப் சந்தைப் பருவத்தில் இதுவரை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள மொத்த நெல் மதிப்பு ரூ.20,557 கோடியாகும். இதன் மூலம் 5.38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.