விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் அல்ல.. செயல்களால் பதில் சொல்லுங்க... தேசிய விருது பெற்ற நடிகை அட்வைஸ்..
விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிப்பதை விட, உங்கள் படைப்புகள் மூலம் பதிலளிக்க வேண்டியதே முக்கியம் என்று தேசிய விருது பெற்ற நடிகை சீமா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
10வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) இன்று சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வை பேராசிரியர் ஷிவ் கதம் நடத்தினார். இந்த அமர்வில் பேசிய சீமா பிஸ்வாஸ் தனது திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
தனது பயணத்தைப் பற்றி நினைவுகூர்ந்த சீமா பிஸ்வாஸ், "நான் முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராக ஆசைப்பட்டேன், ஆனால் நடிப்பில் எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் தான் எனது உண்மையான ஆசை என்ன என்பதை எனக்கு உணர்த்தியது. எனது பயணம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தொடங்கி என்னை ஆஸ்கர் விருதுக்கு அழைத்துச் சென்றது" என்று கூறினார்.
பண்டிட் குயின் படத்தில் தனது ஐகானிக் கேரக்டர் பற்றிப் பேசிய அவர், "ஸ்கிரிப்டைப் படித்த பிறகு, மூன்று நாட்கள் தூங்க முடியவில்லை. இந்த கதாப்பாத்திரம் எனக்கானது என்று எனக்குத் தெரியும். இந்தப் படத்தில் பணிபுரிவது ஒரு ஆழமான அனுபவம், அது என்றென்றும் என்னுடன் இருக்கும். பண்டிட் குயின் படத்திற்குப் பிறகு, நான் ஒரு சர்ச்சைக்குரிய நடிகை மட்டுமல்ல, மிகவும் திறமையான நடிகை என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதனால் தான் நான் காமோஷி படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தேன்." என்று தெரிவித்தார்.
ஆர்வமுள்ள நடிகர்களைப் பொறுத்தவரை, "ஒவ்வொரு பாத்திரமும் நம்பகத்தன்மையைக் கோருகிறது. உங்கள் கதாபாத்திரங்களிலிருந்து உத்வேகம் பெறுங்கள். ஆனால் அவற்றை ஒருபோதும் பின்பற்ற முயற்சிக்காதீர்கள். ஏனெனில் நகலெடுப்பது அசல் நடிப்பின் ஆன்மாவை அழித்துவிடும். ஒரு கேரக்டருக்கு தயாராகும் போது, நீங்கள் உங்களை முழுமையாக அர்ப்பணித்து, அந்த கேரக்டரின் வாழ்க்கையை 24/7 வாழ வேண்டும். எனக்கு, ஒவ்வொரு பாத்திரமும் புதிதாக தொடங்குகிறது. அதை வெளிப்படுத்துவதற்கு நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்கிறேன்." என்று தெரிவித்தார்.
பிரபல பாலிவுட் நடிகையான சீமா பிஸ்வாஸ் 1998-ம் ஆண்டு வெளியான சேகர் கபூரின் பண்டிட் குயின் படத்தில் பூலான் தேவி கேரக்டரில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். இந்த படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். பின்னர் தீபா மேத்தாவின் வாட்டர் (2005) திரைப்படத்தில் சகுந்தலாவாக நடித்ததற்காக 2000 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகை ஜெனி விருதையும் வென்றார்.
காமோஷி: தி மியூசிகல், பூட், விவா மற்றும் ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட் உள்ளிட்ட பல படங்கள் மூலம் சீமா பிஸ்வார் பிரபலமானார். திரைப்படங்கள் மட்டுமின்றி, அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : “சூர்யா அப்படி பண்ணிருக்க கூடாது.. எவ்வளவோ கேட்டேன்.. ஆனா…” கௌதம் மேனன் ஓபன் டாக்…