போர் வீரர்களுக்கு மரியாதை!. இன்று தேசிய ஆயுதப்படை கொடிநாள்!.
Armed Forces Flag Day: நாட்டின் எல்லைகளை இரவு பகலாக பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, ஆயுதப் படை வீரர்களின் கொடி நாள் கொண்டாடப்படுகிறது. போரில் வீரமரணமடைந்தவர்கள், உயிர் தியாகம் செய்தவர்கள், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டிருக்கும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உள்ளிட்டோரின் தியாகத்தை சிறப்பித்து, நலனை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1949 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப்படை வீரர்கள் கொடி நாள் கொண்டாடப்பட்டு, போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்நாள் ஆயுதப் படை வீரர்களின் கொடி தினம், இந்தியக் கொடி தினம் என்றும் அழைக்கப்படுகிறது, ஆயுதப்படை வீரர்கள் கொடிநாளை முன்னிட்டு இந்தியர்களிடம் இருந்து ஆயுதப்படை குழுவினருக்கு இயன்ற அளவு நிதி திரட்டி படை வீரர்களின் நலனை பாதுகாத்து மேம்படுத்தும் முயற்சியில் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக, பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என்று மக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறது.
கொடி தினத்தின்போது பொதுமக்கள் அளிக்கும் பங்களிப்பு மூன்று காரணங்களுக்காக செலவிடப்படுகிறது. முதலாவதாக, போரில் ஏற்படும் சேதங்களுக்கு, காயப்படும் வீரர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவைக்கு வழங்கப்படுகிறது. இரண்டாவதாக இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனுக்காக நிதி உதவி அழிப்பது மற்றும் மூன்றாவதாக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக உதவி செய்வதற்காக நிதி திரட்டப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் இயங்கும் ஆயுதப் படை வீரர் நலத்துறை இந்த நிதியை வசூலித்து நிர்வகிக்கிறது. இந்த கொடி நாளில் இந்திய ராணுவப் படை வீரர்கள், விமானப் படை வீரர்கள், மற்றும் கடற்படை வீரர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். படைவீரர்களுக்கான ஒரு திருவிழா போல இந்த நிகழ்வுகள் நடக்கும். நாட்டின் பாதுகாப்புக்காக வீரர்கள் எவ்வாறெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பது பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். மேலும் இந்நாளில் முப்படை வீரர்களைக் குறிக்கும் வகையில், சிவப்பு, அடர் நீலம் மற்றும் வெளிர் நீல நிறங்களில் சின்ன சின்ன கொடிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களை நினைவு கூறுவது மற்றும் அவர்களின் குடும்பத்துக்காக பங்களிப்பது என்பது நம்மால் மிகவும் எளிதாக செய்யக்கூடிய செயல் தான்.
எத்தனை கோடி கொடுத்தாலும் நாட்டின் பாதுகாப்புக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் படை வீரர்களுக்கும் அதற்காகவே உயிர்துறந்த வீரர்களுக்கும், அவர்களன் வீரர்களின் துணிச்சலுக்கு எதுவுமே ஈடாகாது. நாட்டின் காவல் வீரர்களுக்காக நீங்கள் பங்களிக்க விரும்பினால், பின்வரும் இணைப்புகளின் மூலம் உங்களால் இயன்ற தொகையை நீங்கள் இணையத்தின் வழியாகவே செலுத்தலாம்.