சற்றுமுன்..! முதல்வர் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறப்பு...!
மேட்டூர் அணையில் இருந்து 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து உபரி நீர் வரத்து உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து நீரை திறந்து விடுவது குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேட்டூர் அணையில் கடந்த ஜூலை 17ம் தேதி முதல் நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.30 டி.எம்.சி யாகவும் உள்ளது. கர்நாடாகவிலுள்ள 4 முக்கிய அணைகளும் நிரம்பி உபரி நீர் வினாடிக்கு சுமார் 1.48 இலட்சம் கனஅடி வந்து கொண்டிருக்கிறது. கர்நாடாகவில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால், இந்த நீர்வரத்து மேலும் மூன்று நாட்களுக்குத் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன சாகுபடிக்கு நீரைத் திறந்து விடுவது குறித்து இன்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரினை செம்மையாகப் பயன்படுத்தும் வகையில் இன்று மாலை 3 மணியளவில் மேட்டூர் அணை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து தண்ணீரின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு, நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீர் திறந்துவிடப்படும். தற்போது பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்களுக்கும், ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் உவகையோடு கொண்டாடுவதற்கும், ஏரிகள் மற்றும் குளங்களில் சேமிப்பதற்கும் ஏற்றவாறு காவிரி நீர் திறந்துவிடப்படவுள்ளது.