5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! களத்தில் இறங்கிய இந்திய ராணுவம்..!! கதிகலங்கும் கேரளா..!!
கேரளாவில் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு சூரல்மலையில் முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. மீட்புப் பணிகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதியிடம் கேட்டறிந்தார்.
அதிகாலை 2 மணி முதல் 6 மணிக்குள் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. இதில், சூரல்மலையில் நிவாரண முகாமாக செயல்பட்ட பள்ளியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சேப்பர்ஸ் பிரிவு (MEG) பெங்களூருவில் இருந்து வருகின்றனர். மண்சரிவில் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் ராணுவ பொறியியல் துறை ஆய்வு மேற்கொள்கிறது என்று கேரளாவில் முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட் :
கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குவதால், அங்கு 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக அதி கனமழைக்கான் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.