பெண்களே எச்சரிக்கை!!! தாய்ப்பால் கொடுக்காத பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்றுநோய்...
பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்று, மார்பக புற்றுநோய் தான். மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பரம்பரை வழியாக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் குடும்பத்தில் உள்ள அம்மா, பாட்டி, அத்தை, போன்றவர்களுக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், உடனடியாக மரபு வழி பரிசோதனை செய்து புற்றுநோய் மரபணு உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். மார்பக புற்றுநோயை பொறுத்தவரை, ஆரம்பத்திலேயே நாம் கண்டறிந்து, முறையான சிகிச்சை கொடுத்தால், 95% வரை குணமாக வாய்ப்புள்ளது. மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதை கண்டறிய, மார்பக சுய பரிசோதனை அல்லது மருத்துவ மார்பக பரிசோதனை செய்யலாம்.
பலரை பாதிக்கும் இந்த மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம், ஒருவரின் உடலில் அதிகம் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உடலில் அதிகமாக இருப்பதால், பால் சுரக்கும் பகுதிகளில் உள்ள செல்கள் அதிகம் தூண்டப்பட்டு வளரத் தொடங்கும். 50 வயதுக்கு மேல் ஆகியும் மாதவிலக்கு நிற்கவில்லை என்றால் அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும். இதனால், 50 வயதிற்கு பிறகும் மாதவிலக்கு இருக்கும் பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வது கட்டாயம்.
இன்று உள்ள காலகட்டத்தில், பலர் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை.. சிலர் தங்களின் அழகை கருத்தில் கொண்டு தாய்ப்பால் கொடுப்பது இல்லை என்றாலும், ஒரு சில பெண்களுக்கு வேலையின் நிமித்தமாகவும், உடல் நலம் காரணமாகவும் பால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பது உண்டு. ஆனால், தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, தாய்ப்பால் கொடுக்காத அல்லது குறைந்த நாட்கள் மட்டும் கொடுத்த பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.