'விசிக இல்லையென்றால் திமுக கிடையாது' - ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு VCK எம்.பி ரவிக்குமார் கண்டனம்..!!
வடமாவட்டங்களில் விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி விவாதத்தை தூண்டியது. அந்த பேட்டியில் சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் என்ற பதவிக்கு வரும் போது 40 ஆண்டுகால அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு, தி.மு.க., மேலிடத்தை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக எம்.பி ரவிக்குமார், “திமுக – விசிக கூட்டணி எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல, அது ஒரு கொள்கைக் கூட்டணி. விசிக இல்லையென்றால் வடமாவட்டங்களில் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, அரசியல் முதிர்ச்சியற்றது. கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாக கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும். தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற திமுக முக்கிய காரணம். திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்ல விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல, விசிகவுக்கு2 MPக்கள், 4 MLAக்கள் இருப்பது திமுக உடனான கூட்டணியால்தான்”இவ்வாறு தெரிவித்தார்.