பலாத்கார வழக்கு..!! விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! 26 ஆண்டுகளுக்கு பின் நிரபராதி என தீர்ப்பு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர், கடந்த 1997ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி, தனது மகளை லல்லா என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக 16ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், ஜனவரி 27ஆம் தேதி அதே கிராமத்தில் அந்த சிறுமி மீட்கப்பட்டார். பிறகு லல்லா, மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை கடந்த 2000இல் விசாரித்த லக்னோ கூடுதல் விரைவு நீதிமன்றம், லல்லாவுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.
இதனால் கடந்த 26 ஆண்டுகளாக லல்லா சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் லக்னோ விரைவு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் வயது மருத்துவ அறிக்கையில் காணப்படவில்லை. எனவே, அவர் சம்பவம் நடந்தபோது 16 வயதுக்கு மேற்பட்டவராக இருந்திருப்பார் என கருத இடம் உண்டு.
மேலும் 1997ஆம் ஆண்டின் பெயரிடப்படாத இந்திய தண்டனை சட்டமானது, உடலுறவு கொள்வதற்கு 16 வயது தகுதியானது என அனுமதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தன் விருப்பத்தின்பேரிலேயே மனுதாரருடன் சென்றார் என்பதும் நீதிமன்றம் அந்த பெண்ணிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனவே, மனுதாரர் லல்லாவை விடுதலை செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.