Rain | கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளு குளு நியூஸை சொன்ன வானிலை மையம்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு தொடங்கிய பருவமழை, இந்தாண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்துள்ளது.
பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது, "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, இன்று முதல் வரும் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதே ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 4 செ.மீ, காயல்பட்டினத்தில் (தூத்துக்குடி) 3 செ.மீ, கன்னியாகுமரி, கருப்பாநதி அணை (தென்காசி) தலா 1 செ.மீ மழையும் பெய்திருக்கிறது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.