ராகுல் காந்தி நடைபயணம்..!! மொத்தம் 4,500 கிமீ..!! ஒரு கிலோ மீட்டருக்கு இத்தனை லட்சம் செலவா..?
ராகுல் காந்தியின் நடைபயணத்திற்காக காங்கிரஸ் கட்சி செலவிடும் தொகை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் காந்தி தனது இந்தியா ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்ற இந்த பயணம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பயணத்திற்காக காங்கிரஸ் கட்சி நாளொன்றுக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளதாக, கட்சி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட காங்கிரஸின் வருடாந்திர தணிக்கை அறிக்கையின்படி, ”2022-23ஆம் ஆண்டில் அதன் மொத்த வருமானமான ரூ.452 கோடிக்கு எதிராக, ரூ.467 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் செலவாக ரூ.192 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகளை கணக்கிட்டால், பாரத் ஜோடோ யாத்திரைக்கு ரூ.71.83 கோடி செலவிடப்பட்டுள்ளது. மொத்தமாக 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தில் கிட்டத்தட்ட 4,500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணமாக சென்றுள்ளார்.