ஷாருக்கானின் ஜவான் படத்தின் சாதனையை முறியடித்த புஷ்பா 2..! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
கடந்த 2021-ம் ஆண்டு சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பான் இந்தியா படமாக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து புஷ்பா 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. புஷ்பா 2 படத்தின் பணிகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் புஷ்பா 2 படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.. ப்ரீ ரிலீஸ் பிசினஸ்லேயே இந்த படம் லாபம் ஈட்டிய நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ. 175.1 கோடி வசூலித்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக இந்த படம் மாறி உள்ளது.
உலகளவில் 10,000 திரைகளில் இந்த படம் வெளியான நிலையில், அது பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பெங்களூரு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் டிசம்பர் 4 அன்று நடந்த பிரீமியர் ஷோக்கள் மூலம் ரூ.10.1 கோடி வசூலானது. இதுவும் முதல் நாள் வசூலுக்கு அடித்தளமாக அமைந்தது.
இதன் மூலம் புஷ்பா 2 படம் ஷாருக்கானின் ஜவான் படம் செய்த முந்தைய சாதனையை முறியடித்தது. அதாவது ஜவான் முதல் நாளில் ரூ.64 கோடி வசூல் செய்தது. ஆனால் புஷ்பா 2, ஹிந்தி பதிப்பில் மட்டும் ரூ.72 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக புஷ்பா 2 மாறி உள்ளது.
ஹிந்தி மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் புஷ்பா 2 குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. தெலுங்குப் பதிப்பு மட்டும் ரூ.85 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழ்ப் பதிப்பு ரூ.7 கோடியும், மலையாளப் பதிப்பு ரூ.5 கோடியும் வசூலித்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பார்வையாளர்களை புஷ்பா 2 ஈர்த்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
மேலும் RRR படத்தின் வசூலை கூட புஷ்பா 2 அதிகம் வசூல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் லீட் ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். அதே நேரத்தில் ஃபஹத் பாசில் வழக்கம் போல் நெகட்டிவ் ரோலில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
புஷ்பா படத்தில் னசுயா பரத்வாஜ், சுனில், ஜெகபதி பாபு, ராவ் ரமேஷ் மற்றும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை ஸ்ரீலீலாவின் ஸ்பெஷல் கேமியோவ்ம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.