2வது வாரத்திலும் மாஸ் காட்டும் புஷ்பா 2.. ரூ.1600 கோடியை நெருங்கும் வசூல்.. பாகுபலி 2 சாதனையை முறியடிக்குமா?
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5ம் தேதி வெளியான‘புஷ்பா 2: தி ரூல்’ ஒவ்வொரு பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் தகர்த்து வருகிறது. சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புஷ்பா 2 வெளியாகி 6 நாட்களிலேயே 1000 கோடி வசூலை கடந்ததால் வேகமாக 1000 கோடி வசூலை கடந்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்தியாவின் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களில் டங்கல், பாகுபலி 2 படங்களை தொடர்ந்து புஷ்பா 2 தற்போது 3-வது இடத்தில் உள்ளது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் உலகளவில் ரூ.1600 கோடி வசூலை எட்டியுள்ளது. மேலும் புஷ்பா 2 படத்தின் உள்நாட்டு வசூல் இப்போது ரூ.973 கோடியாக உள்ளது, மேலும் இரண்டு நாட்களில் ரூ.1000 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு படமாக இருந்தாலும் இந்த படத்திற்கு ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தி வெளியீடுகளில் ஒன்றாக மாறி உள்ளது.. ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ போன்ற படஙக்ளின் சாதனையை புஷ்பா 2 முறியடித்துள்ளது. மேலும். உலகளவில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘RRR’ படத்தையும் இது விஞ்சி, இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் 3-வது படமாக மாறி உள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் ஓடி வருவதால் பாகுபலி 2 சாதனையையும் இது முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சி வெளியானது. அப்போது அங்கு அல்லு அர்ஜுன் வந்திருந்த நிலையில், அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி, தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்றம் டிசம்பர் 14ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.
இதனிடையே, புஷ்பா 2 ப்ரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியானது. பொதுவாக மூளைச்சாவு ஏற்பட்டாலே அந்த நபரின் அடுத்தடுத்த பாகங்கள் செயலிழக்க தொடங்கும். இதனால் கிட்டத்தட்ட மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே மருத்துவர்கள் கூறுவார்கள். எனினும் இந்த சிறுவன் உயிர் பிழைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : 2024-ல் பாக்ஸ் ஆபிஸை மிரள வைத்த டாப் 10 தமிழ் படங்கள்..! ஃபிளாப்பான படங்களும் லிஸ்ட்ல இருக்கு…!