2024-ல் பாக்ஸ் ஆபிஸை மிரள வைத்த டாப் 10 தமிழ் படங்கள்..! ஃபிளாப்பான படங்களும் லிஸ்ட்ல இருக்கு...!
2024 முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு சுமாரான ஆண்டாகவே இருந்தது. ஜனவரி மாதம் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களே பெற்றன. இதை தொடர்ந்து வெளியான எந்த தமிழ் படமும் வரவேற்பை பெறவில்லை.
பின்னர் ஏப்ரல் மாதம் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து தங்கலான், மகாராஜா ஆகிய படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தன. கருடன், டிமாண்டி காலனி, பிளாக், லப்பர் பந்து போன்ற படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றன.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான விஜய்யின் கோட் படம் வசூலை வாரி குவித்தது. ரஜினியின் வேட்டையன் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் செய்து சாதனை படைத்தது.
2024-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்:
கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "கோட்" படம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் உள்ளது. பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.460 கோடி வசூல் செய்தது.
அமரன் : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் "அமரன்". மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ. 330 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக வசூல் செய்த படங்களில் அமரன் படம் 2-வது இடம் பிடித்துள்ளது.
வேட்டையன் : டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் வேட்டையன். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிப்பில் வெளியான இந்த கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. ரூ.200 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் உலகளவில் ரூ.255 கோடி வசூல் செய்தது.
மகாராஜா : நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.170 கோடி வசூல் செய்து, அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
ராயன் : தனுஷ் இயக்கி நடித்திருந்த படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வ ராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.156 கோடி வசூல் செய்தது.
இந்தியன் 2 : மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் இந்தியன் 2. 1995-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறிய இந்தியன் படத்தின் 2வது பாகமாக உருவான இந்த படம் படுதோல்வி அடைந்தது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் உலகளவில் ரூ.150 கோடி மட்டுமே வசூல் செய்தது.
கங்குவா : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் கங்குவா. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாபி தியோல், திஷா படானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம், நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வியை சந்தித்தது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.105 கோடி மட்டுமே வசூல் செய்தது.
அரண்மனை 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை 4. சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது.
அயலான் : ரவி குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அயலான். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.84 கோடி வசூல் செய்தது.
தங்கலான் : பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தங்கலான். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் வெற்றி பெற்றது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.