புனே போர்ஷே விபத்து!… டிரக், ஓலா டிரைவர்களை ஏன் கட்டுரை எழுதச் சொல்லவில்லை?… ராகுல் ட்வீட்!
Rahul Gandhi: நீதி பணக்காரர் மற்றும் ஏழை இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும்" என்று புனே போர்ஷே விபத்தில் பலியானவர்களுக்கு நீதி கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணி அளவில் போர்ஷே சொகுசு காரில் அதிவேகமாக 17 வயது சிறுவன் சென்று கொண்டிருந்தான். அளவுக்கு அதிக மது போதையில் போர்ஷே காரில் வேகமாக சென்ற பொழுது அந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்ற அனீஸ் மற்றும் அவரது நண்பர் அஸ்வினி ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். மது போதையில் இருந்த அந்த சிறுவன் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் அந்த காரை ஓட்டியது தெரியவந்த நிலையில் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய சிறுவனை விபத்து குறித்து கட்டுரை எழுத வேண்டும், போக்குவரத்து போலீஸுடன் சென்று 15 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும், கெட்ட சிறுவர்களுடன் சேரக்கூடாது என பெற்றோர்களை அறிவுறுத்தி சிறார் நீதிமன்றம் 14 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது. இரண்டு உயிர்களை மது போதையில் கொன்ற சிறுவனுக்கு 14 மணி நேரத்தில் ஜாமின் வழங்கப்பட்டது எப்படி எனவும் கட்டுரை எழுத சொன்னது குற்த்தும் பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் பலியானவர்களுக்கு நீதி கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், "பஸ், லாரி, ஓலா, உபேர், ஆட்டோ டிரைவர்கள் யாரையாவது விபத்தில் சிக்கினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறார்கள். ஆனால், பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 16-17 வயதுடைய ஒரு பணக்கார பையன் இருவரைக் கொன்றால், அவனிடம் கட்டுரை எழுத சொல்லப்படுகிறது. ஆனால், டிரக் மற்றும் ஓலா டிரைவர்களை ஏன் கட்டுரை எழுதச் சொல்லவில்லை? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நீதி அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். நீதிக்காக நாங்கள் போராடுகிறோம். ஏழை பணக்காரர் இருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று வீடியோவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Readmore: அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!… மாஸ்க் கட்டாயம்!… தமிழக அரசு எச்சரிக்கை!