மணிப்பூருக்கு மேலும் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைக்கும் மத்திய அரசு..!! இதுவரை 258 பேர் உயிரிழப்பு..!!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்தாண்டு மே மாதம் அங்குள்ள குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு சமீபத்தில் 3 பெண்கள், 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்ததால், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின்போது தலைநகர் இம்பால் உள்பட பல மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்தியிலும், மணிப்பூரிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தான், மணிப்பூருக்கு மேலும் 10,000 ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அம்மாநில தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மணிப்பூருக்கு ராணுவத்தின் 90 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 10,000 வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக தற்போது வரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட திருடப்பட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 258 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Read More : அதானி குழுமத்தில் ரூ.88,000 கோடி கடன் வழங்கிய வங்கிகள்..!! அதிகபட்சமாக ரூ.27,000 கோடி வழங்கிய எஸ்பிஐ..!!