விளம்பரத்திற்காக போராட்டம்..!! வெட்கமா இல்ல..!! மாணவி பாலியல் வழக்கை ஏன் அரசியலாக்குறீங்க..? ஐகோர்ட் காட்டம்..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை அரசியலாக்குவது ஏன்..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக மகளிரணி இன்று போராட்டம் அறிவித்திருந்தது. அன்புமணியின் மனைவி சௌமியா தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சௌமியா அன்புமணியை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், "போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள். பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா? இப்படி ஓர் சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்" என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல், இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்குவது வேதனையளிப்பதாக நீதிபதி தெரிவித்தார். மாணவி வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. காவல்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் நிலையில், இந்த போராட்டத்தை நடத்துவது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.
விளம்பரத்துக்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்றும், இந்த சமூகத்தில் ஆண், பெண் என்கிற பாகுபாடு இருப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நீதிபதி கட்டாமாக கூறினார். எனவே, போராட்டத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.