’நீங்க நேக்கா வெளிய போய்டுங்க’..!! ’நீதான்யா உண்மையான விசுவாசி’..!! போஸ்டரில் ஆளுநர், எடப்பாடியை வெச்சி செய்த திமுக..!! ட்ரெண்ட் ஆகும் #GetoutRavi..!!
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என குற்றம்சாட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் உடனே அங்கிருந்து வெளியேறினார். இதனால் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இதற்கு முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளுநரை கண்டித்து இன்று (ஜனவரி 7) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் இன்று காலை 10 மணியளவில் "மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் #GetoutRavi என்ற ஹேஸ்டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர்... அவரைக் காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி!" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், "சார்.. நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன்.. நீங்க நேக்கா வெளிய போய்டுங்க" என்று எடப்பாடி கூறுவது போன்றும், அதற்கு ஆளுநர் ரவி சூப்பர்யா.. "நீதான்யா உண்மையான விசுவாசி" என்று சொல்வது போன்றும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களை திமுகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.