டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு.. மதுரை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட பேரணி..!!
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் தடையை மீறி மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த சுரங்க அனுமதிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழ்நாடு சட்டசபையிலும் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அரிட்டாபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை அப்பகுதி கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். உண்ணாவிரதம், நடைபயணம், ஆர்ப்பாட்டம் என ஒவ்வொரு நாளும் அரிட்டாபட்டி சுற்றுவட்டார மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மேலூரில் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டியில் இன்று (ஜன.,07) பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடினர். அவர்கள் வாகனங்களிலுன், நடைபயணத்திலும் மதுரையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலூரில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
Read more ; ஒரே ஒரு ஹாய் அனுப்பினால் போதும்.. ரயில் பயணிகளுக்கு இனி இந்த தொல்லை இருக்காது..!! என்னனு தெரிஞ்சுக்கோங்க..