இந்திய பார் கவுன்சில் அதிரடி... ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞர் பணியில் இருந்து நீக்கம்...!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட 28 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக, தமாக கட்சிகளை சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 28 பேர் அடுத்தடுத்து கைதாகினர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை அளித்த புகாரின் அடிப்படையில் பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.