ரயில்வே வளாகங்களில் குழந்தைகளை பாதுகாக்க திருத்தப்பட்ட செயல்பாட்டு நெறிமுறை வெளியீடு...!
ரயில்வே வளாகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான திருத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை ரயில்வேயும், பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் வெளியிட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான முயற்சிகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உறுதியளித்துள்ளது. நாடு முழுவதும் ரயில்வே வளாகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு மைல்கல் முயற்சியாக, ரயில்வே பாதுகாப்புப் படை, பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, புதுப்பிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP -எஸ்ஓபி) 25.10.2024 அன்று டெல்லியில் உள்ள ரயில் பவனில் வெளியிடப்பட்டது.
இதனை வெளியிட்டுத் தொடங்கி வைத்த மத்திய மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அனில் மாலிக், மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறார்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ரயில்வேயின் முன்முயற்சிகளைப் பாராட்டினார். ஒவ்வொரு நாளும் 2.3 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் என்றும் இதில் 30 சதவீதம் பெண்கள் எனவும் தெரிவித்தார். அவர்களில் பலர் தனியாக பயணம் செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கடத்தல்காரர்களால் கடத்தப்படும் அபாயத்தில் உள்ள சிறார்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.