தேர்தலால் வந்த சிக்கல்..!! புதிய பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதில் தாமதம்..!! எப்போது தான் கிடைக்கும்..?
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதால், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் தேதி தள்ளப்போகிறது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறதாம். அதேபோல் இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படலாம் என்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில், 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்துவிட்டது என்றும், தகுதியான ஒருசிலர் விடுபட்டு இருந்தால் அந்த பட்டியலை ஆட்சியரிடம் வழங்க திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தேர்தலுக்கு பின் இவர்களுக்கும் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனால், உரிமைத்தொகை திட்டத்தின் விரிவாக்க தேதிகள் தள்ளிபோகின்றன. இந்த வார இறுதியில் முதல் கட்ட பணிகள் இதற்காக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதால் விரிவாக்கம் தள்ளிப்போகிறது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.