முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு... தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்..!

Private Medical College Administrative Allotment...should be allotted to students of Tamil Nadu
06:30 AM Sep 07, 2024 IST | Vignesh
Advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும், அவற்றில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் கைப்பற்றப்படுகின்றன என்றும் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன என்றாலும், அந்த இடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

இந்தியாவில் மொத்தம் 704 மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், அவற்றில் 74 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்றன. அவற்றில் மொத்தமாக 11,700 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் தனித்தனியான கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பொறுத்தவரையில் அவை முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மாணவர்களைக் கொண்டு தான் நிரப்பப்படுகின்றன. ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் அவற்றில் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். அதனால், தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது சமூக அநீதியாகும்.

மருத்துவப் படிப்புக்கான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 3 வழிகளில் நிரப்பப்படுகின்றன. சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்லூரிகள், அவற்றில் உள்ள இடங்களில் 65% இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குகின்றன. மீதமுள்ள 35% இடங்களில் 15% இடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகவும், 20% இடங்கள் நிர்வாகத்திற்காகவும் ஒதுக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் 50% இடங்களை மட்டுமே அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குகின்றன. இவற்றில் சிறுபான்மைக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மற்ற கல்லூரிகளுக்கு அந்த கட்டுப்பாடு இல்லாததால், அந்த இடங்களில் பிற மாநிலத்தவர் அதிக அளவில் சேருகின்றனர். தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் நடத்தப்படும் கலந்தாய்வின் மூலமாகவே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் ஒதுக்கப் பட வேண்டும் என்பது இயற்கை விதியாகும். ஒரு மாநிலத்தில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் சேருவார்கள் என்ற நம்பிக்கையில் தான், ஒரு மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதியை வகுத்துள்ளது. நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரவிருந்த அந்த விதி, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவை பிற மாநிலத்தவரால் சூறையாடப்படுவதை அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பிற மாநிலத்தவருக்கு வாரி வழங்கப்படுகின்றன. இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் வெளிமாநில மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், தமிழக மாணவர்கள் மருத்துவம் பயில போதிய வாய்ப்புகள் இல்லாத நிலை உருவாகிவிடும்.

ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 85% அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 50% இடங்கள் அம்மாநில மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சேர முடியாது எனும் போது, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மட்டும் பிற மாநிலங்களின் மாணவர்களுக்கு தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயமாகும்?

ஒரு மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் விதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாட்டில் இனிமேல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க முடியாது. அத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் இப்போது உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களாவது தமிழர்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழக மாணவர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :
mbbsPrivate CollegeReservation seattn government
Advertisement
Next Article