"இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் முதல் சிலிண்டர் விலை குறைப்பு வரை.." பிரதமர் அலுவலகத்திற்கு 264 மனுக்கள்.! தினம் கடிதம் அனுப்பிய தமிழ் பெண்.!
கோவையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கோரிக்கைகளை அனுப்பி வரும் விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்தப் பெண்ணிற்கு தினமும் போன் செய்து அவர் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதித்து வருகின்றனர். பெரியார் அம்பேத்கர் மற்றும் மார்க்கஸ் போன்றவர்களின் சித்தாந்தங்களை படித்திருப்பதால் பொது மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கோவை மாவட்டம் காந்திமா நகரை சேர்ந்த அரசு ஊழியர் பழனிச்சாமி. இவரது மனைவி கிருத்திகா. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற கோரியும் கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு அதிகம் நிதி ஒதுக்குதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை இளைஞர்களிடம் விழிப்புணர்வு குறித்து பிரதமர் உரையாற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 264 மனுக்களை பிரதமருக்கு அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கிறார்.
மேலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் இவர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினை தொடர்பாக இவர் அனுப்பும் கோரிக்கை மனுக்களுக்கு தினமும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து போன் செய்து அக்னாலேஜ்மென்ட் கொடுக்கின்றனர். மேலும் இவரது கோரிக்கையை மனுக்கள் தொடர்பாக விவாதங்களும் நடைபெறுகிறது. இது குறித்து கிருத்திகா தனது கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு இது போன்ற பொதுமக்களுடன் அக்கறை உள்ள விஷயங்களுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். அவர்களது ஆக்கமும் ஊக்கமும் இந்தப் பணியை தொய்வின்றி செய்வதற்கு எனக்கு உதவுகிறது என தெரிவித்தார். மேலும் தன்னுடைய கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை நிறைவு பெற்றாலும் அது மிகவும் மன நிறைவைத் தரும் எனவும் தெரிவித்திருக்கிறார். இளம் வயது முதலே தந்தை பெரியார் சட்ட மேதை அம்பேத்கர் மற்றும் காரல் மார்க்ஸ் ஆகியோரின் சித்தாந்தங்களை படித்து வருவதால் பொது மக்களின் அக்கறை தொடர்பான இது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.