தூள்..! பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப பதிவு... இனி ஆன்லைன் மூலம் நீங்களே பதிவு செய்யலாம்...!
திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பபதிவு விவரங்களை இனி சுயமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; திருமணமான பெண்கள் கர்ப்பமடைந்தவுடன் 12 இலக்கு கொண்ட நிரந்தர கர்ப்பப்பதிவு எண்ணை(RCH-ID) PICME இணையதளத்தின் மூலம் தேவைப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக பெற்றுக்கொள்ளலாம். தாய்மார்கள் ஏற்கனவே தாய் சேய் நல அட்டை வைத்திருப்பின் தங்களின் இந்த கர்ப்பத்தினை இணையதளத்தில் சுயமாக பதிவு செய்து கொள்ளலாம். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பதிவு மற்றும் மகப்பேறு நிதியுதவி பெற கர்ப்ப பதிவு எண் அவசியம்.
கர்ப்பத்தினை பதிவு செய்ய கர்ப்பிணியின் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், கர்ப்பிணியின் ஆதார் எண், கணவரின் பெயர், வயது, ஆதார் எண், மொபைல் எண், திருமண தேதி, மருத்துவ பதிவுகள், கடைசி மாதவிடாய் தேதி, முந்தைய கர்ப்பம், பிரசவம், கருக்கலைப்பு விவரங்கள், இந்த கர்ப்பத்திற்கு முன் உயிருடன் இருக்கும் குழந்தையின் எண்ணிக்கை, கர்ப்பிணித்தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பெயர் மற்றும் இடம், பிரசவம் பார்க்க திட்டமிட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஊர் உள்ளிட்ட விபரங்களுடன் https://picme.tn.gov.in என்ற இணையதளத்தில் சுய கர்ப்ப பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .