பரம்பரையாக ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியுமா?? நிபுணர் அளித்த அதிர்ச்சி தகவல்..
அசந்தால் ஆளை கொல்லும் நோயில், முக்கிய இடம் பிடிப்பது புற்றுநோய் தான். நாளுக்கு நாள் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ள நிலையில், புற்றுநோயின் வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மரபணு காரணமாக புற்று நோய் ஏற்படும் என்று சொல்லப்படும் நிலையில், ஒருவரின் வாழ்க்கை முறை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 80 முதல் 90% வீரியம் மிக்க கட்டிகள், வாழ்க்கை முறையால் தான் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று உணவுகள். ஒரு சில வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் கட்டாயம் புற்றுநோய் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ், அதிக நேரம் சமைக்கபட்ட உணவு, அதிக சர்க்கரை சேர்த்த பானங்கள், துரித உணவுகள், சோடா பானங்கள்
போன்ற உணவுகள் புற்றுநோயை உண்டு செய்யும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், இது குறித்து விளக்கம் அளித்த நிபுணர் கூறும்போது, "அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மோசமான உணவு பழக்கவழக்கங்கள், மாசுபாடு போன்றவற்றால் தான் இன்று பலருக்கு கேன்சர் ஏற்படுகிறது. இதனால் உணவே மருந்து என்பது போய், மருந்தே உணவு என்று மாறிவிட்டது.
இந்நிலையில் கேன்சர் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அசைவ உணவுகளால் புற்றுநோய் ஏற்படாது. ஆனால், அசைவ உணவுகளில் செயற்கை கலர் மற்றும் அதிக எண்ணெய் சேர்த்து பொரித்து எடுப்பது பாதிப்புகளை உண்டாக்கும். அதிக காரம், அதிக மசாலா, அதிக அளவு சிவப்பு இறைச்சி ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது, அது சில நேரங்களில் கேன்சராக மாறும் அபாயம் உண்டு. அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
அந்த வகையில், மரபணு மற்றும் குடும்ப பரம்பரையாக ஏற்படும் புற்றுநோயை தடுக்க முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் அதை தள்ளிப்போடலாம். இதனால் தினசரி ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது அவசியம். மேலும், கலப்படம் நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, ஃப்ரெஷ்ஷான உணவுகளை சேர்க்க வேண்டும். மேலும், அதிக மசாலா பொருள்களை சேர்க்காத உணவுகளை சாப்பிடுவது நல்லது" என்றார்.