தமிழகமே...! வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்படும்...! தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் எனவும், தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.