பொங்கல் பண்டிகை..!! நாளை வங்கிக் கணக்கில் வந்து விழும் ரூ.1,000..!! குஷியில் இல்லத்தரசிகள்..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதியுள்ள பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பலர், தங்களுக்கு தகுதி இருந்தும் ரூ.1,000 கிடைக்காததாக கூறி வந்த நிலையில், மீண்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆனால், இதுவரை இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. நேற்று சட்டமன்றத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த டிசம்பர் மாதம் 1 கோடியே 14 லட்சத்து 65,525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், இதுவரை ரூ.1,000 பயன்பெறாத மகளிருக்கு தகுதியின் அடிப்படையில் நிச்சயமாக உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த முறை விண்ணப்பிக்க முடியாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்களின் வங்கிக் கணக்கில் நாளைய தினமே (ஜனவரி 10) உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. வழக்கமாக 15ஆம் தேதி தான் பணம் வரவு வைக்கப்படும். ஆனால், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 15ஆம் தேதி பெண்களுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தான், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1,000 டெபாசிட் செய்யப்படுகிறது.